ஆடி அமாவாசை

Inuvil kanthan

ஆடி அமாவாசை

வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். அந்த சுழற்சி முறைப்படி ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.

ஜோதிட சாஸ்திரத்தில் பல திதிகள் இருந்தாலும், சஷ்டி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, பவுர்ணமி, அமாவாசை போன்ற திதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம், சிறப்பம்சம் நிறைந்ததாக கூறப்படும் திதி அமாவாசை. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது அமாவாசை திதியாகும். ஆண்டுக்கொரு முறை அவர்களது திதி நாளில் திவசம், சிரார்த்தம் செய்தாலும் மாதந்தோறும் அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்வது புண்ணிய காரியமாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமாகும்.

சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய வழிபாடுகளால் முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும். அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இறந்த தாய், தந்தைக்கு அவர்களது திதி நாளில் அவர்களை நினைத்து வணங்கி சிரார்த்தம் செய்வது மகனின் முக்கிய கடமையாக கூறப்படுகிறது. தாய், தந்தை இறந்த தேதி, திதி ஆகியவற்றை மறந்தவர்கள், தவற விட்டவர்கள் கவலைப்பட தேவையில்லை, அவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம். இறந்தவர்களை நினைத்து அன்றைய தினம் வீட்டில் அவர்கள் படத்துக்கு மாலை போட்டு, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலைவாழை இலையில் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்துக்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆடி அமாவாசையன்று பல கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன. குறிப்பாக கிராமங்களில் சக்தி, அம்மன், கிராம தேவதைகள், ஐயனார், முனீஸ்வரன், கருப்பண்ணசாமி போன்ற காவல் தெய்வங்களுக்கு படையலிட்டு, பலி கொடுத்து பூஜைகள் இன்றளவும் விமரிசையாக நடக்கின்றன. அமாவாசை நடுநிசி பூஜைகளும் சில இடங்களில் விசேஷமாக நடத்தப்படுகின்றன. அதேபோல் திருஷ்டி, தோஷம் கழிப்பு போன்ற மந்திர, தந்திர சடங்குகளையும்
அமாவாசையில்தான் செய்வார்கள், தொடங்குவார்கள்.

Share this post